பிரதமர் மோடிக்கு ஒரே மாற்று ராகுல்காந்தி தான்….காங்கிரஸ்

டில்லி:

பிரதமர் மோடிக்கு ஒரே மாற்று ராகுல்காந்தி தான் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘தற்போது 2 மாடல்கள் தான் உள்ளது. ஒன்று மோடி மாடல். இவர் நாள் ஒன்றுக்கு ஆறு முறை தனது ஆடைகளை மாற்றுகிறார். நாட்டு நலனை விட தனது ஆடைகளுக்கு தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

மற்றொன்று ராகுல் மாடல். எளிமை மற்றும் தெளிவு தான் இவரது நோக்கம். ராகுல்காந்தி தான் பிரதமர் மோடிக்கு ஒரே மாற்று. இந்த நாடு அவரை பிரதமராக பார்க்க விரும்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, தெலுங்குதேசம் ஆகியவற்றில் பூசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் எதிர்கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைத்து வருகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஒரு பெரிய மாற்று அலையை காங்கிரஸ் உருவாக்கும். கர்நாடகாவில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது வெறும டிரைலர் தான். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் இதர மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்’’ என்றார்.