டெல்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்  சிறைக்குச் சென்று சந்தித்து பேசினார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அவர்மீது, சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் அவருக்குஉச்சநீதி மன்றம், ஏற்கனவே ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு  மாதம் 22ந்தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை  சுமார் 99  நாட்களாக சிறையில் வாடும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.