ஆரோக்யா சேது செயலி பயன்பாடு – கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி: கொரோனா தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மீது ஆரோக்யா சேது செயலி கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அவர்களின் தனியுரிமைப் பாதுகாப்பை பெரிதும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று சாடியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

ஒரு தனியார் அமைப்பால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் மீது, எந்த அமைப்பு ரீதியான கண்காணிப்பும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஆரோக்யா சேது செயலி என்பது ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும். இது ஒரு தனியார் அமைப்பால் இயக்கப்படுகிறது மற்றும் இதற்கென்று முறையான கண்காணிப்பு அமைப்பு கிடையாது. இதனால், தனிநபர்களின் பாதுகாப்பு & தனியுரிமைகள் கேள்விக்குள்ளாகின்றன.

தொழில்நுட்பம் என்பது நம்மை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவக்கூடியதுதான். ஆனால், மக்களை, அவர்களின் விருப்பமில்லாமல் கண்காணிப்பதற்கு பயம் ஒரு காரணியாகப் பயன்படுத்தப்படக்கூடாது” என்றுள்ளார் ராகுல் காந்தி.

ஆனால், ராகுலின் இந்த விமர்சனத்தையடுத்து பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமில்லாத ஒன்று எனவும், கொரோனா பரவலுக்கு எதிரான யுத்தத்தில் மக்களைப் பாதுகாப்பதற்கு இந்த செயலி பெரிதும் பயனளிப்பதாய் கூறினார்.

இதுவொரு வலுவான தரவுப் பாதுகாப்பு கட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.