டில்லி:

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், கட்சியின் மூத்த உறுப்பி னர்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தார்.

ஆனால், அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி  ஏற்காத பட்சத்தில்,  ராகுலும் தனது பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது என்று பல்வேறு தலைவர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இன்று ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் தனது ராஜினாமா முடிவை கைவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆய்வு கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அதில் பேசிய ராகுல்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  கமல் நாத், ப.சிதம்பரம் குறித்து கடுமையாக விமர்சித்தார். இவர்களுக்கு  கட்சியின் நலனைக் காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை  என்றும், . ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், சவுதிகார், பண மதிபிழப்பு, விவசாயிகள் பிரச்சினை போன்றவை குறித்து தான் பேசினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அது குறித்து பேசவில்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல்,  தேர்தல் பிரசாரத்தின்போது, தான் எடுத்துவைத்த கருத்துக்களுக்கு எத்தனை தலைவர்கள்  எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதுபோல, பிரியங்காவும், தனது சகோதரர் தேர்தல் களத்தில் தனியாக நின்று போராடினார், மூத்த தலைவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,   தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இதுவரை 9 மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துஉள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், பதவி ராஜினாமா செய்யும் நோக்கில் இருந்து வரும், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  பிரியங்கா காந்தி இன்று ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிடுமாறும் அதேசமயம் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, ராகுலின் சச்சின் பைலட், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியை சந்தித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் ராகுல் காந்தி  வீட்டுக்கு வந்தார். கடந்த சில தினங்களாக அவரை சந்திக்க ராகுல் காந்தி மறுத்து வந்தநிலையில் இன்று சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராகுல் தனது ராஜினாமா முடிவை கைவிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பதவி வருகின்றன. இதன் காரணமாக டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது,  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்” என்றும்,  தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதில் வெற்றி பெற்று விட்டீர்கள்” என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.