நியூஸ்பாண்ட்:
newsbond
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து திடீரென அழைப்புவர,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் டில்லி பறந்தார். இன்று காலை இருவரும் சந்தித்துப்பேசினர். இந்த திடீர் சந்திப்பு, தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றதுமே, தொண்டர்களிடையே உற்சாகம் பற்றிக்கொண்டது.  “அனைத்து கட்சி தலைவர்களிடமும் சுமுகமான நட்பு கொண்டவர் அதே நேரம் தான் சார்ந்த கட்சியின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்” என்று காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
அதே நேரம், “அ.தி.மு.க.வில் இருந்து உருவான இவர், தங்களுக்கு சாதகமாக இருப்பாரா” என்ற எண்ணம் கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. ஆகவே ஜி.கே. வாசனை வைத்து ஆழம் பார்த்தது.
0
தி.மு.க.வில் இருந்து சமிக்ஞை கிடைக்க…  அக் கட்சியின் பொருளாளரான மு.க. ஸ்டாலினை சந்தித்தார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்.  அதுமட்டுமல்ல.. எப்போதும் செய்தியாளர்களிடம் மூடுமந்திரமாக பேசும் வாசன், “உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிக்காக ஸ்டாலினை சந்தித்தேன்” என்று சொல்லிவிட்டுப்போனார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை என்ன என்பதை அறிய காத்திருந்தது தி.மு.க. தலைமை.
தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவரை சந்தித்தார்.
“ஆகா.. நமக்கு சாதகமான மூடில்தான் நாவுக்கரசர் இருக்கிறார்” என்று அகமகிழ்ந்தது தி.மு.க. தரப்பு.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
உள்ளாட்சி தேர்தலுக்கான சீட் இட ஒதுக்கீட்டில் காங்கிரஸை ரொம்பவே வஞ்சித்தது தி.மு.க. இதற்கு திருநாவுக்கரசர் தரப்பில் இருந்து கொஞ்சம் கடுமையாகவே ரீயாக்ஷன் வர..  அப்போதே ஆடிப்போனது தி.மு.க. தரப்பு.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்து தி.மு.க.வுக்கு செக் வைத்தார் திருநாவுக்கரசர். அது, ஜெயலலிதா உடல் நிலை விவகராம்.
“முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாக இருக்கிறது. நிர்வாகம் நடக்கவில்லை. முதல்வரின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட வேண்டும்” என்று அறிக்கை விட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
உடனடியாக இதற்கு பதிலடி கொடுத்தார் திருநாவுக்கரசர். “ஒரு பெண்மணி உடல் நலமின்றி சிகிச்சை பெறுகிறார். அவரது புகைப்படத்தை வெளியிடச் சொல்வது நாகரீகமில்லை” என்றார்.
அதோடு, காங். துணைத்தலைவர் ராகுலிடம் பேசி, அவரை சென்னைக்கு வரவழைத்தார். இருவருமாக ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்பல்லோ சென்றுவந்தார்கள். “அதிமுகவுக்கு பக்கபலமாக காங்கிரஸ் இருக்கும்” என்ற தொணியில் சொல்லிவிட்டுப்போனார் ராகுல்.
இதெல்லாமே தி.மு.க.வுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிலையில் அக் கட்சிக்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் ராகுலும் – திருநாவுக்கரசரும்.
ராகுலிடமிருந்து திடீர் அழைப்பு வர, டில்லிக்கு பறந்தார் நாவுக்கரசர். இன்று காலை இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்கள்” என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும்,  கூட்டணி மாற்றம் குறித்தே இருவரும் ஆலோசித்தார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விவரமறிந்தோர் சொல்வது இதுதான்:
“ராகுல் எப்போதுமே தி.மு.க.வுடன் இணக்கமாக இருந்ததில்லை. தற்போதைய சூழலில் திருநாவுக்கரசரும் அதே மூடில்தான் இருக்கிறார். அக் கட்சி, காங்கிரஸை மதிப்பதில்லை என்கிற வருத்தம் நாவுக்கரசருக்கு இருக்கிறது. தவிர, இந்திரா – எம்.ஜி.ஆர். காலத்தில் உருவான காங் – அதிமுக கூட்டணியே இயற்கையான கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் நினைக்கிறார்கள்.
ஏற்கெனவே ராகுல் காந்தியிடம், தமிழக தலைவர்கள் சிலர், இதைச் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
ராகுலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “,தேமுதிகவுடன் கூட்டணி உண்டா” என்ற கேள்விக்கு, “கூட்டணி இல்லை. ஆனால் தேவைப்பட்டால் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம்” என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
“இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, தி.மு.க.வுடனான தனது கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.