டில்லி,

ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக விரைவில் பதவி ஏற்பார் என, ராகுலின் நண்பரும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால் அவரால் கட்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக,  தற்போது அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரான இருக்கும் ராகுல் காந்தியை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராகுல்காந்தி தலைவராக நியமிக்கப்படுவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர் தலைவராக பதவி ஏற்பது தள்ளிப்போகிறது.

இந்நிலையில் 2019ம் ஆண்டு வர இருக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ராகுலை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் அகில இந்தியத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும், அப்போது ராகுல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராகுலின் நெருங்கிய நண்பரும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தீபாவளி முடிந்ததும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்படும். அப்போது  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்பார் என்று தான் நம்புவாக கூறி உள்ளார். அவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், ராகுலின் தற்போதைய செயல்பாடு காரணமாக அவர் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று கூற முடியாது. அரசியல் குடும்பங்களில் உள்ளவர்களின் நடைமுறை களை பொறுத்தே அவர்கள் பொறுப்புக்கு வர முடியாதும். ஏன்  அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாஜக.வில் பொறுப்பில் இல்லையா?’ எனவும் கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா குறித்த கேள்விக்கு பதில் அளித்த சச்சின், பிரியங்கா காங்கிரசில்தன் இருக்கிறார். இருந்தாலும், அவர் எந்த அளவு பணியாற்ற விரும்புகிறார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தற்போது குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு  3 நாட்கள் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது அவரின் பிரசார அணுகுமுறைகள் மாறியிருந்தன. அவருக்கு மக்களின் அமோக வரவேற்பும் கிடைத்து. இதை வைத்து பார்க்கும்போது  தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

தீபாவளி முடிந்ததும் விரைவில் ராகுல்காந்தி அகில இந்திய தலைவர் பதவியை ஏற்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.