பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி வெட்கப்பட வேண்டும்: ராகுல்காந்தி

டில்லி:

பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு அறிக்கையில்  தெரிவித்துள்ள தகவல் குறித்து, மோடி வெட்கப்பட வேண்டும் என்று  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் வன்முறைகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாக ஒரு ஆய்வு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரதமர் மோடி  வெட்கப்பட வேண்டும், இது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று ராகுல்காந்தி கூறி உள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் குறித்து ஐ.நா,  193 நாடுகளை  சேர்ந்த 550 வல்லுநர்களிடம் ஆய்வு நடத்தி, அந்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில்,  பெண்களுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடைபெறும் நாடாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாகவும் இந்தியா இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்றபிறகே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நாடு முழுவதும் உள்ள சமூக அமைப்புகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஐ.நா ஆய்வு அறிக்கையும் அதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

மோடி, பிட்னெஸ் வீடியோ வெளியிட்டு வேடிக்கை செய்து வருகிறார். ஆனால், உலகநாடுகளில் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய ஒரு கணக்கெடுப்பை மேற்கோளிட்டு, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… “மிகவும் ஆபத்தான நாடு” என்று  தெரிவித்து உள்ளது.

பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கார்டனில் உருவாக்கும்போது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில்,  ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளை விட  இந்தியா முன்னணியில் இருப்பது குறித்து சிந்தித்திருக்க வேண்டும்….

உலக நாடுகளிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா என்று கூறியிருப்பது, நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம் என்றும் கூறி உள்ளார்.