வெள்ளச் சேதங்களை பார்வையிட நாளை வயநாடு வருகிறார் ராகுல்!

திருவனந்தபுரம்:

கேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிட ராகுல்காந்தி நாளை வயநாடு வரவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.  வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு மாவட்டம் புதுமலை பகுதியில் வியாழக் கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில், 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,வயநாடு தொகுதி எம்.பி. யான ராகுல்காந்தி, நேற்று  பிரதமர் மோடியிடம், வயநாடு பகுதிக்கு உடடினயாக உதவி தேவை என்று போனில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நாளை பார்வையிடுகிறார் என்று  கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.