எச் ஏ எல் ஊழியர்களுடன் கப்பன் பூங்காவில் ராகுல் காந்தி சந்திப்பு

பெங்களூரு

எச் ஏ எல் நிறுவன ஊழியர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கப்பன் பூங்காவில் ஊழியர்களை சந்தித்தார்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இடப்பட்டதில் இருந்தே அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரராக பொதுத்துறை நிறுவனமான (எச் ஏ எல்) இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்த்துக்கு வழங்காமைக்கு கண்டனம் தெரிவித்தன.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டது. இதனால் இந்த ஒப்பந்தத்தில் நடந்த முறைகேட்டில் மோடிக்கு பங்கு உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பெங்களூருவில் அமைந்துள்ள எச் ஏ எல் நிறுவனத்துக்கு ரபேல் விமானம் தயாரிக்கும் திறன் உள்ளதா என்பது குறித்து எச் ஏ எல் ஊழியர்களிடம் கேட்டறிய அவர் முடிவு செய்தார்.

ஆனால் எச் ஏ எல் நிறுவனம் அவரை பாதுகாப்புக் காரணங்களை காட்டி உள்ளே அனுமதிக்கவில்லை. அதை ஒட்டி அவர் கப்பன் பூங்காவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் ஊழியர்களை சந்தித்தார்.

ஊழியர்களிடயே பேசிய ராகுல்காந்தி, “நாட்டின் பாதுகாப்பை கருதி சுதந்திரம் அடைந்ததும் இந்தியாவில் இரு பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்த இரண்டில் எச் ஏ எல் ஒன்று. உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டு விமானங்களை தயாரிக்கும் இந்நிறுவனத்தை சாதாரணமாக கருத முடியாது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு முறை இந்தியாவில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச அளவில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளதாக கூறி இருந்தார்.

எச் ஏ எல் நிறுவனத்துக்கு போர் விமானங்களை தயாரிக்கும் திறன் இருந்தும் மோடி அரசு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாய்ப்பு அளித்துள்ளது. எச் ஏ எல் நிறுவனத்தால் போர் விமானங்களை தயாரிக்க முடியாத நிலை இருந்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த்தும் அதற்கான வசதிகள் செய்யப்படும்.” என உறுதிஅளித்தார்.