தோல்விக்கு பிறகும் அமேதி வந்த ராகுல்: காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

அமேதி:

17வது மக்களவைக்கான தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, தோல்வி அடைந்த நிலையில், இன்று மீண்டும் அமேதி தொகுதிக்கு விஜயம் செய்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

உ.பி.மாநிலத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல்காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில் அமைச்சர் ஸ்மிரிதி இரானி களமிறக்கப்பட்டார். அங்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த  ராகுல் காந்தி,  பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று  அமேதி தொகுதிக்கு வந்தார்.

அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து  ஆலோசனை நடத்தி வருகிறார். அதைத்தொடர்ந்துபொதுக்கூட்டம் ஒன்றிலும் பேச இருக்கிறார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியல் கட்சியினர் பலர், தொகுதி பக்கமே தலைகாட்டாமல் ஒதுங்கி வரும் நிலையில், ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதிக்கு வந்து கட்சியினரை சந்தித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி