ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் 4மணி நேரம் பார்வையிடுவார்… கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: தமிழகம் வரும் ராகுல்காந்தி 4 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

பொங்கலையொட்டி நாளை (14நதேதி) மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தருகிறார். இதையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்ட ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த நிலையில், ராகுலின் திடீர் பயணம் தேர்தலுக்கான பயணமாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே எஸ் அழகிரி,  ஜல்லிக்கட்டுப் போட்டியை காண ராகுல்காந்தி டெல்லியில் இருந்து  நேரடியாக விமானம் மூலம் மதுரைக்கு வருவதாகவும், அங்கிருந்து போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று பார்வையிட  இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியின் வருகை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும், தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கும் தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் இருக்கும் என்று கூறியவர்,  இந்த பயணத்தின் மூலம் ராகுல் காந்தி தமிழக மக்களை எவ்வளவு விரும்புகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பயணத்தில் அவர் எந்த அரசியல் உரையும் செய்ய மாட்டார் என்றும்,  விவசாயிகளுடன் எந்த சந்திப்பையும் திட்டமிடவில்லை என்றும் தெரவித்துள்ள அழகிரி, ஜல்லிக்கட்டு பார்க்க நான்கு மணி நேரம் செலவிடுவார். இதில் அவர் விரும்பினால், விவசாயிகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.