நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு  பள்ளி மாணாக்கர்களுடனான சந்திப்பின்போது,  10ம் வகுப்பு மாணவியுடன் போட்டிபோட்டு புஸ்அப் எடுத்ததார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, 3வது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை ஹெலிகாப்டர் மூலம்  தென்காசியில் இருந்து குமரிக்கு வந்த ராகுலுக்கு பிரமாண்டமான  முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சர்ச் ரோட்டில் கொடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல், பின்னர் அகஸ்தீஸ்வரம் சென்று, மறைந்த குமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து,  நாகர்கோவில் டெரிக் ஜங்சனில் மக்கள் சந்திது உரையாற்றிய ராகுல், பின்னர் தக்கலைக்கு சென்றார். அங்கு காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், மக்களிடையே உரையாற்றினார். அப்போது, காமராஜரின் பெருமைப்படுத்தியவர், அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை புகழ்ந்தார்.

பின்னர்,  மதியம் 1 மணி அளவில், மிளகுமூடு பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றியதுடன், அங்குள்ள  தூய ஜோசப் மெட்ரிக் பள்ளியில், மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, அப்பள்ளியைச் சேர்ந்த மாணவியும்,  ஜூடோ வீராங்கனையான மெரோலின் ஷெனிகாவின் சவாலை ஏற்றுடன், மேடையில், அவருக்கு இணையாக வேகமாக  புஸ்அப் எடுத்தார். ராகுலின் வேகமான உடற்பயிற்சியை  கண்ட அங்கிருந்த பாதிரியார்கள், ஆசிரியர்கள் மாணாக்கர்கள் வியந்தனர்.

ராகுல் புஸ்அப் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.