ராகுலின் 1வருட கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகழாரம்

டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சித்தலவர் ராகுல்காந்தியின் ஒரு வருட கடும் உழைப்பு கிடைத்த வெற்றியே 3மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர் பாராட்டு வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 3 மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. தெலுங்கானா, மிசோரம் தவிர,, சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில், ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்று வருகிறது.

பல ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்து வந்த மாநிலங்களில், பாஜகவினரை மண்ணை கவ்வ வைத்து, காங்கிரஸ் கட்சி வீறுகொண்டு எழுந்துள்ளது. இந்த எழுச்சிக்கு இளந்தலைவர் ராகுல்காந்திதான் காரணம் என காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர்.

ராகுல்காந்தி  கடந்த 2013-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  துணை தலைவ ராக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக  ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக முடி சூட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு (2017)  டிசம்பர் 9ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வான நிலையில், கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும், கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூங்கிக்கிடந்த காங்கிரஸ் தொண்டர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தி வந்தார்.

மக்களோடு மக்களாக இணைந்து பழகியும்,  சாலை வழியாக பயணம்  சென்று  மக்களின் சுக துக்கங்களிலும், விவசாயிகளின் மனதிலும் இடம் பிடித்தார். இதன் காரணமாக அவ்வப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடி வந்தது.

தேசிய அரசியலில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக சீறி எழுந்த ராகுல்காந்தி, பாராளுமன்றத் திலும் மோடி குறித்து பேசியும், அவரை கட்டி அணைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

ரஃபேல்போர் விமான ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசத்துக்கும் ஒத்துக்கொள்ளாமல் இன்றுவரை குரல் கொடுத்து வருகிறார். பாஜகவுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முனைப்பு காட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற இந்த ஒரு வருடத்தில்,  ராகுல்காந்தியின் சுறுசுறுப்பு, அனை வருடனும் எளிமையாக பழகும் பாங்கு, ஏழை மக்கள் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வரும் தன்மை போன்ற நடவடிக்கை காரணமாக நாட்டு மக்களின் மனதில் ராகுல் காந்தி உயர்ந்து நிற்கிறார்.

ராகுலின் கடின உழைப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுஉள்ளது. அதன் எதிரொலியாகத்தான்  தற்போது  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களும் உற்சாகமுடன் களத்தில் இறங்கி பணியாற்றி வந்ததால் இன்று 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ராகுல் காந்தியின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசே 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருப்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த தேர்தல் முடிவுகள், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரு முனோட்டமாக கருதப்படுகிறது.