புதுடெல்லி: எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காமல் தனது 100 நாட்களைக் கடந்துள்ள நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

மத்திய அரசில் தலைமைத்துவப் பற்றாக்குறை வெளிப்படுகிறது என்றும், அரசுக்கெதிரான விமர்சனங்களைத் தடுக்க மீடியாக்களின் மீது அடக்குமுறை செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டுள்ள மோடி, நாட்டின் ஜனநாயகத்தை இந்த அரசு நசுக்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிதைந்துவரும் நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கான திட்டங்களும் வழிகாட்டுதல்களும் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தியும் அரசின் மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். “நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்தப் பின்னரும் மோடியின் அரசு மெளனமாக இருக்கிறது. நாட்டில் நிலவும் மோசமான சூழலை இந்த அரசு மறைக்க முயல்கிறது.

தொழில்நிறுவனங்களின் நிலை ஆபத்தில் இருக்கிறது. வணிக நடவடிக்கைகள் உற்சாகமிழந்து காணப்படுகின்றன. நாடகத்தனம், ஏமாற்றுவேலை மற்றும் பொய்ப் பிரச்சார பரப்புரைகள் ஆகியவற்றின் மூலம் அனைத்தையும் மூடிமறைக்க முயல்கிறது அரசு” என்று விமர்சித்துள்ளார்.