ராகுல் பிரதமராவது ஸ்டாலினின் விருப்பம்: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று நேற்று நடைபெற்ற கருணாநிதி திருவுருவ சிலை சிறப்பு விழாநிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடியிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கான பதிலை சாமர்தியமாக தவிர்த்த எடப்பாடி,  ராகுல் பிரதமராவது ஸ்டாலினின் விருப்பம் என்று கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டுள்ளது அவர்களுடைய விருப்பம் என்றார்.

தேர்தல் அறிவித்த பின்னர் தான், யார், யார் எங்கே, எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும்.  ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது அவரது விருப்பம். அதில் கருத்து கூற ஒன்றுமில்லை என்றார்.

மேலும்,  அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு, ஆயிரத்து 532 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாக தெரிவித்த முதல்வர்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.