காந்திநகர்,

குஜராத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, 3 நாட்கள் பயணமாக ராகுல்காந்தி குஜராத் சென்றுள்ளார். அங்கு பிரபலமான சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது சோம்நாத் கோவிலுக்கு ராகுல் சென்று சாமி தரிசனம் செய்ததை, இந்து அல்லாதவர் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பாஜகவினர்  சர்ச்சையை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜகவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்திய குஜராத் தேர்தலில், ராகுல்காந்தியின் தேர்தல் சுற்றுப்பயணம் அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்  மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும், மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் 3 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத் சென்றுள்ளார்.

குஜராத்தில் காங்கிரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், வரும் காலங்களில் காங்கிரசை மேலும் பலப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து சோம்நாத் மாவட்டத்திலுள்ள பிரபலமான சிவன் கோவிலான சோமநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற கோவில் நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு ராகுல் சாமி தரிசனம் செய்தார்.

ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது சோம்நாத் ஆலயத்துக்கு சென்று வேண்டிக்கொண்ட ராகுல்காந்தி, தற்போது குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றிருப்பதற்காக நன்றி தெரிவிப்பதற்காக கோவிலுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.