ரெய்டு: டிடிவி ஆதரவு புகழேந்தி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை,

டந்த 9ந்தேதி முதல் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரிதுறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இன்று 5வது நாளாக பல இடங்களில் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி வீட்டிலும், கடந்த 9ந்தேதி சோதனை நடைபெற்றது. அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்து, விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால், 13ந்தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆஜரானார். காலை 11 மணி அளவில் அங்கு வந்த அவர் விசாரணையை எதிர்கொள்ள அலுவலகத்திற்குள் சென்றார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சோதனை சசிகலாவின் மன்னார்குடி உறவினர்கள் அவர்கள் நண்பர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று 5வது நாளாக ஜெயா டிவி உள்பட பல இடங்களில் சோதனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.