ரூ. 80 ஆயிரம் கோடியை குறிவைத்து ரெய்டு?

நியூஸ்பாண்ட்:

“நாட்டின் வரித்துறை வரலாற்றில் முதன் முறையாக பிரம்மாண்ட ரெய்டு…” என்று தொலைக்காட்சி அறிவிப்பாளர் குரலில் கூறியபடியே வந்து அமர்ந்தார் நியூஸ்பாண்ட்.

“இரண்டு சத இடங்கள் இருபது சத அதிகாரிகள் என்றெல்லாம் தவகவல்கள் வருகின்றனவே” என்றபடியே நியூஸ்பாண்டின்  மேஜையில் சூடான சுக்கு காபி கோப்பையை வைத்தோம்.

ஒரு சிப் ரசித்துக் குடித்தவர், “நீர்கூட, கட்சி சின்னத்துக்கான தீர்ப்பு  “அவர்களுக்கு” எதிராக வரும் என்றும்.. அப்போது அவர்கள் எதிர்க்கக்கூடாது என்பதற்காகவே இந்த மிரட்டல் ரெய்டு என்று சிலர் நினைப்பதாகவும் கட்டுரை வெளியிட்டீரே…” என்றார்.

“ஆம்…”

“அதற்கு நேர்மாறாக சிலர் சொல்கிறார்கள். அதைச் சொல்லலாமா?”

”இது என்ன கேள்வி? அனைத்துத்தரப்பு கருத்துக்களையும் பாரபட்சமின்றி வெளியிடுவதுதான் நமது நோக்கம் என்பது நீர் அறிந்ததுதானே?”

“ஆனாலும் உம்மிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றுதான்..” என்று பவ்யமாக கேட்பதுபோல் நியூஸ்பாண்ட்  தோரணை காட்ட…

“விசயத்துக்கு வாருமய்யா” என்று அதட்டினோம்.

தொண்டையை செருமிய நியூஸ்பாண்ட், பேச ஆரம்பித்தார்:

“மிரட்டலுக்காக ரெய்டு நடத்தவது என்பது காலம் காலமாக இருப்பதுதான். அப்படி நடக்கும்போது சம்பந்தப்பட்டவர்களின் சில இடங்களில் ரெய்டு நடக்கும். பேரம் நடக்கும். அப்புறம் அந்த ரெய்டு நடவடிக்கை அப்படியே அந்தரத்தில் விடப்படும். இது ஒன்றும் புதிது அல்ல.

ஆனால் இப்போது நடக்கும் ரெய்டு அப்படிப்பட்டது கிடையாது..  அந்த குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமல்ல… . அவர்களது தொடர்பு எங்கெல்லாம் இருக்கிறதோ.. அந்த அடி ஆழம் வரை சென்று ரெய்டு நடந்து வருகிறது.

“அட இவரெல்லாம் ரெய்டுக்குத் தகுதியானவர்தானா” என்று அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் கேட்டதும் நடந்திருக்கிறது.  அந்த அளவுக்கு, “அந்த” குடும்பத்தினரின் பண விவகாரங்கள் சிறிய அளவில் இருக்கும் இடங்களைக்கூட விடாமல் துழாவியிருக்கிறார்கள் இந்த ரெய்டில்.

ஆகவே இது கண்துடைப்பு ரெய்டோ, கண்ணாமூச்சு ரெய்டோ அல்ல. அந்த குடும்பத்தினர் சட்டத்துக்குப் புறம்பாக குவித்திருக்கும் சொத்துக்கள், பணக்குவியல்கள் அத்தனையையும் வெளியில் எடுக்கும் அசுர முயற்சி இது என்கிறார்கள்.. என்னிடம் பேசியவர்கள்!” என்றார் நியூஸ்பாண்ட்.

“அந்த குடும்பத்தின் மீது மத்திய மேலிடத்துக்கு அப்படி என்ன ஆத்திரமாம்?”

“அதைத்தான் என்னிடம் பேசியவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன.

மத்திய மேலிடம், “அந்த” குடும்பத்தை, அரசியலில் இருந்து “சம்பாதித்தவர்கள்” என்று நினைக்க வில்லையாம். “சம்பாதிப்பதற்காக” மட்டுமே அரசியலில் ஒட்டிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்றே பார்க்கிறதாம்.

ஆகவேதான் அந்த குடும்பம், எந்தவொரு விதத்திலும் அரசியலில் நீடிப்பது ஜனநாயக அமைப்புக்கே கேடு என்று மத்திய மேலிடம் நினைக்கிறதாம்..”

“ஓ…”

“இன்னும் கேளும்…  தற்போதைய மத்திய மேலிடம் பொறுப்புக்கு வந்தவுடனேயே, நாடு முழுக்க “கவனிக்கப்பட வேண்டியவர்கள்” பற்றிய குறிப்புகளை உளவுத்துறையிடம் கேட்டதாம்.

 கிட்டதட்ட ஒன்றரை மாதத்தில் பலரது தகவல்கள் வந்த சேர்ந்தனவாம்.  அவற்றில், மேலிடத்தை மிகவும் அதிர வைத்தது “அந்த”  குடும்பத்தினரைப் பற்றிய தகவல்கள் தானாம்!”

“அட..!”

“ஆமாம்..  தகவல்களை எல்லாம் படித்த மேலிடத்து தலைவர், “மனிதர்களில் பலர், பணத்துக்காக எதுவும் செய்வார்கள். ஆனால் இவர்கள் அதைவிட “அதிகமாக” செய்திருக்கிறார்களே..” என்று ஆச்சரியப்பட்டு தனது சகாக்களிடம் சொன்னாராம்!”

“அப்படியா..”

“ஆமாம்.. இந்த நிலையில்தான் இங்கே பெரிய துக்கம் நடந்தது.

அப்போதிலிருந்தே மத்திய மேலிடம், அந்த குடும்பத்தை அரசியலில் இருந்து விலக்கி வைக்க முயன்றது. இது அனைவருக்கும் தெரியும்.  சில பல குளறுபடிகளுக்குப் பிறகு முருகர் முக்கிய பொறுப்புக்கு வந்தார்..”

“முருகர்… ? ஓ.. புரிகிறது. புரிகிறது.. மேலே சொல்லும்.. ”

“ பொறுப்புக்கு வந்த முருகர் வடக்கே பயணித்து தலைநகர் சென்றார்.  முக்கிய பிரமுகரை  சந்தித்தார். அப்போது  முக்கிய பிரமுகர் ஒரு விசயத்தைச் சொன்னாராம்..” அந்த குடும்பத்தினர், அரசியலைவிட்டு முழுமையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அப்படி  ஒதுங்கிக்கொண்டால், அவர்கள் குவித்து வைத்திருக்கும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்கள், பணத்தை எதுவும் செய்ய மாட்டோம். இல்லாவிட்டால் அவர்களுக்குச் சிரமம்தான். அவர்களிடம் இதைத் தெரிவியுங்கள் என்றாராம்”

“80 ஆயிரம் கோடி ரூபாயா…”

“வாயைப் பிளக்காமல் கேளும்…  ஆட்சி அதிகாரத்தை ருசிப்போருக்கு இதெல்லாம் சாதாரணம் என்பது உமக்குத் தெரியாதா? 

முருகர் பெயர் கொண்டவர், இதை அந்த குடும்பத்து முக்கிய பிரமுகரிடம் தெரிவித்திருக்கிறார்.

அந்த பிரமுகரோ முருகரை ஒருமையில் பேசி, காய்ச்சி எடுத்துவிட்டாராம். நாங்கள்தான் கட்சி.. கட்சிதான் நாங்கள் என்றாராம்..”

“அட..”

“ம்… இந்தத் தகவலை மத்திய மேலிடத்துக்கு பாஸ் செய்திருக்கிறார் முருகர் பெயர் கொண்டவர். அப்போதிலிருந்தே அந்த குடும்பத்தினர் குறித்த அனைத்துத் தகவல்களையும்,  உரிய துறைகள் தோண்டித் துருவ ஆரம்பித்துவிட்டனவாம். எல்லா தகவல்களும் திரட்டப்பட்ட பிறகு, மிக திட்டமிட்டு ரெய்டு நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருகிறது..”

“ஏ.. யப்பா..!”

“கேளும்…  அதனால்தான் வழக்கம்போல, “முக்கிய ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன” என்கிற அறிவிப்போடு இந்த ரெய்டு நிற்காது. தொடர் நடவடிக்கைகள் இருக்கும். அந்த குடும்பத்தின் சாம்ராஜ்யத்துக்கு வைக்கப்பட்ட வேட்டு இது என்கிறார்கள் என்னிடம் பேசியவர்கள்!”

“சரி.. இந்த ரெய்டு என்பதே அரசியல் ரீதியான பழிவாங்கல்”  என்று சிலர் சொல்கிறார்களே…  இதனால் அந்த குடும்பத்தித்தினர் மீது மக்களிடையே அனுதாபம் ஏற்படாதா?”

“இதைக் கேட்காமல் இருப்பேனா…  இந்த ரெய்டு நடத்துவதற்கு முன்பே தமிழகம் முழுதும் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாம். அதில் பல கேள்விகளோடு அந்த கு டும்பத்தைப் பற்றி இரு முக்கிய கேள்விகள் இருந்தன.

பெரிய மரணத்தைப் பற்றிய சந்தேகம் இருக்கிறதா?  இறந்த தலைவரின் வாரிசாக அந்த குடும்பத்தினரில் எவரையேனும் நினைக்கிறீர்களா” என்பவைதான் அவை.

இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அளித்த ஆகப்பெரும்பாலோர் அந்த குடும்பத்துக்கு எதிராகவே பதில் அளித்திருக்கிறார்கள்!”

“அட..”

“ஆமாம்… இன்னொரு விசயத்தையும் அனுமானித்திருக்கிறார்கள்.  அதாவது அந்த குடும்பத்தினரின் பூர்வீக ஊரில்  இன்றும் அவர்கள் பண சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது அனைவருக்கும் தெரியும்.

 ஆனால் அந்த ஊரில் அவர்களது கட்சி..அதாவது அவர்கள் நிறுத்திய வேட்பாளர் கடந்த பல தேர்தலாகவே வெற்றி பெற்றதில்லை. அதாவது அந்த குடும்பம் அரசியலில் கோலோச்ச ஆரம்பித்த பிறகு, தொடர் தோல்விதான். இதிலிருந்தே சொந்த ஊரிலேயே அவர்களது செல்வாக்கு.. மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லையா.. என்கிறார்கள் என்னிடம் பேசியவர்கள்!”

“லாஜிக்கான விசயம்தான்..!”

“இன்னும் கேளும்.. 1986ல் சிறிய வீடியோ கடை வைத்து, ஒரு காக்கி நிற பையில் வீடியோ கேசட்டுகளை பிரபலங்களின் இல்லங்கள் தேடிச்சென்று கதவு தட்டிய அந்த பெண்மணி… இன்று இரண்டாயிரம் அதிகாரிகளைக் கொண்டு வேட்டை நடத்துகிற அளவுக்கு விசுவரூபம் எடுத்த கதைகளை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

புன்னகையான அந்த ஜூவல்லரி அதிபர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம், திரைப்பட பிரமுகரிடம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து கோடிக்கணக்கான மதிப்புடைய பங்களாவை எழுதி வாங்கி கதற வைத்த கொடுமை…, தலைவலிக்கு மருந்து தயாரிக்கும் கம்பெனியையை தலைசுற்ற வைத்த கொடூரம்,  தண்டல் தர மறுத்ததால் கிரானைட் அதிபரை கவிழ்த்து அவரை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த பகீர் விவகாரம்.. 19 வயது பெண் வீட்டில் இவர்களே கஞ்சாவை வைத்து அவரைக் கைது செய்து அலைக்கழித்த கொடூரம்.. ஒரு புறம் ஆட்சி அதிகாரம்.. இன்னொரு புறம் சாராய ஆலை என்று இரட்டை சாம்ராஜ்யம் நடத்திய விவகாரம்.. அந்நிய செலாவணி பண மோசடி..

அந்த குடும்பத்தின் பணவெறி பிடித்த இது போன்ற .. மனிதாபமானமில்லாத நவடிக்கைகளை மக்கள் மறக்கவில்லை என்கிறார்கள் என்னிடம் பேசியவர்கள்..”

“ஓ..”

“முக்கிய தலைவர் இறந்த பிறகு அவருக்கு இணையாக தனது படத்தை போஸ்டரில் போட்டு ஒட்டினாரே அந்த பெண்மணி.. அப்போது அவரது படத்தை மட்டும் கிழித்த நிகழ்வு  மாநிலம் முழுதும் நடந்ததே… என்றும் அவர்கள் கூறுகிறார்கள்..”

“உண்மைதான்..”

“ஆகவே இந்த ரெய்டு காரணமாக மக்களிடையே அந்த குடும்பத்தின் மீது பரிதாப உணர்ச்சி ஏற்படாது. தவிர 80 ஆயிரம் கோடி ரூபாயையும் வெளிக்கொண்டுவருவதும் நடக்கும் என்கிறார்கள் அவர்கள்!” – சென்ன நியூஸ்பாண்ட் வழக்கம் போலவே சிட்டென பறந்துவிட்டார்.