மதுரை: பல்வேறு வசதிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு வார்டுகளாக மதுரையில் ரயில் பெட்டிகள் மாற்றப்படுகின்றன. அவற்றை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் ரயில்வே நிர்வாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே சார்பில் ரயில் பெட்டிகள் பல்வேறு வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு தனிமை வார்டுகளாக மாற்றப்படுகின்றன. இப்பணி, மதுரை ரயில்வே பணிமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 72 பேர் பயணிக்கும் படுக்கை வசதியுள்ள பெட்டி(ஸ்லீப்பர் கோச்) ஒன்று, மருத்துவர் அறையுடன் கூடிய 16 பேர் தங்கி சிகிச்சைப் பெறும் வகையில் மாற்றப்படுகிறது.

குளியலறை, வெஸ்டர்ன் கழிப்பறை, இரண்டு இந்தியன் கழிப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. கொசு வலை, திரைச்சீலை, தனித்தனி மின் விசிறிகள், வாட்டர் பாட்டில் பவுட்ச், மருந்து பவுட்ச், இன்டர்காம் தொலைபேசி, மருத்துவர் அறையில் அலைபேசி சார்ஜர், ஆக்ஸிஜன் பார்லர் என்று பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இவை கொரோனா தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்படும்.

தேவை ஏற்படின் அவசரகால கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்படும். மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டால் இந்த ரயில் பெட்டிகள் அனுப்பப்படும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஈரோடு, கரூருக்கு இவற்றை அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஐந்து நாட்களில் ரயில் பெட்டிகளை கொரோனா சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால், நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய உயர்தர சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தனர் ரயில்வே அதிகாரிகள்.