ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண்

டில்லி

ப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது.

இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து காணப்படுகிறது.   இந்திய ரயில்வே மூலம் தினசரி சுமார் 500 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.  நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 15000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.   இதைத் தவிர ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் இடம் மாற்றப்படுகின்றன.  சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் விசாரணைகளை அறிந்துக் கொள்ள ரயில்வே ஒரு சில தொலைபேசி எண்களை உபயோகத்தில் வைத்துள்ளது.   ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தகவல் அல்லது விசாரணைக்கு உரியதாக உள்ளது.  இதனால் பயணிகள் ஒரே நேரத்தில் பல எண்களை நினைவில் கொள்ள வேண்டி உள்ளது.   எனவே இந்த தொலைபேசி எண்ணை ஒரே எண்ணாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் 1 முதல் அனைத்து எண்களும் இணைக்கப்பட்டு 139 என்ற எண்ணின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   இந்த எண் 12 மொழிகளில் இயங்க உள்ளது.   இந்த எண்ணில் பயணிகள் குரல் பதிவு அல்லது கால் செண்டர் ஊழியர்கள் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.   இந்த தொலைபேசி எண்ணை எவ்வித தொலைபேசியில் இருந்தும் அழைக்கமுடியும்.

இந்த எண்ணில் * என்னும் எண்ணை அழுத்தினால் அதன் மூலம் நேரடியாக கால் செண்டர் ஊழியரிடம் பேச முடியும்.   அவசரம் மற்றும் மருத்துவ உதவியை நாடுவோர் 1 என்னும் எண்ணை அழுத்த வேண்டும்.  முன்பதிவு நிலை விவரங்களுக்கு 2 என்னும் எண்ணை அழுத்தி அதன் பிறகு பி என் ஆர் நிலை, ரயில் வருகை/புறப்பாடு,  காலி இடங்கள், முன்பதிவு, உள்ளிட்ட பலவற்றைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.