பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: புதிய கட்டணங்கள் நாளை முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜன. 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறையானது கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. நிதியாண்டின் முதல் காலாண்டை விட, 2வது காலாண்டில், வருவாய் ஒட்டு மொத்தமாக சரிந்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில் மூலம் ரூ.13,398.92 கோடி வருவாயும், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரூ.13,243.82 கோடி வருவாயும் ஈட்டியுள்ளது. 2வது காலாண்டில், பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும், சரக்கு கட்டணம் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.

இதையடுத்து, வருவாய் இழப்பை ஈடுகட்ட பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகின. வேறு வழியில்லை என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில்  சூசகமாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புறநகர் கட்டணம் மாறவில்லை.

முன்பதிவுக்கான கட்டணங்களில் மாற்றம் இல்லை, அதே போன்று, சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், சாதாரண ஏசி அல்லாத, புறநகர் அல்லாத கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்கூட்டிய டிக்கெட்டுகளை புக் செய்தவர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.