விமான நிலைய நிர்வாகத்தின் பணிக்கு உரிமை கொண்டாடும் ரயில்வே அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் கெம்ப்பே கெளடா சர்வதேச விமான நிலையம் – பெங்களூரு மத்திய ரயில் நிலையம் இடையிலான ரயில் பாதையானது, ரயில்வேயின் பரிசு என்று கூறியுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

ஆனால், அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில் பாதைப் பணியானது, கடந்த காலங்களில் காரணமின்றி தாமதப்படுத்தப்பட்டது என்று கருத்து ஒருபுறம் நிலவும் வேளையில், இந்த ரயில் நிலையத்தைக் கட்டுவதே விமான நிலைய நிர்வாகம்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

“இந்த புதிய ரயில் பாதை மற்றும் ரயில் நிலைய கட்டுமானத்தின் மூலம், பெங்களூரு மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த ரயில் நிலையம், கெம்ப்பே கெளடா சர்வதேச விமான நிலையத்தின் அருகே அமைகிறது.

இதன்மூலம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல், விமான நிலையத்திற்கு வசதியான முறையில் மக்களால் பயணம் செய்ய இயலும்” என்றுள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

ஆனால், ரயில் பாதை திட்டத்தை விமான நிலைய நிர்வாகம் மேற்கொள்ளும் வேளையில், அதை ரயில்வே துறையின் வேலை என்று உரிமை கொண்டாடுவது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.