உயிரை துச்சமாய் நினைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்

 

மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொதுமுடக்க நேரத்தில், ஆளே இல்லாமல் வெறிச்சோடி இருந்த மும்பையின் புறநகர் பகுதியான வங்கனி ரயில்நிலைய பிளாட்பாரத்தில் சென்றுகொண்டிருந்த பார்வை திறன் இழந்த ஒரு பெண் தன்னுடன் வந்த 6 வயது குழந்தையை பிளாட்பாரத்தில் இருந்து தவறவிட்டார்.

பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை பிளாட்பாரத்தின் உயரம் அதிகமாக இருந்ததால் அதன்மீது ஏற முடியாமல் திணறியது, அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தின் வழியே பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் உதயான் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

குழந்தை கீழே விழுந்ததை அடுத்து அந்த பெண் கூக்குரல் இட்டதை அடுத்து, ரயில்வே ஊழியர் மயூர் செல்கே ரயில் வரும் திசைக்கு எதிர் திசையில் ஓடி வந்து அந்த குழந்தையை தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்தில் ஏற்றி தானும் பிளாட்பாரத்துக்கு தாவி மயிரிழையில் இருவரும் உயிர்தப்பினர்.

இந்த சம்பவம் மொத்தமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது என்றபோதும் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அந்த ரயில்வே ஊழியரின் மனஉறுதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

குழந்தையை காப்பாற்ற ஓடிய அந்த ரயில்வே ஊழியர் ஒரு கட்டத்தில் முயற்சியை கைவிட எண்ணிய போதும், குழந்தை மற்றும் தாயின் அழுகுரல் அவரின் உயிரை பொருட்படுத்தாது  தொடர்ந்து செயலாற்ற செய்தது அவரது மனிதாபிமானத்தை உணர்த்துவதாக இருந்தது.

இவரது தைரியத்தை பாராட்டி இந்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார், மேலும் மத்திய ரயில்வே பிராந்திய இணை மேலாளர் இந்திய ரயில்வே சார்பில் அவரை பாராட்டினார். அதோடு, ஆசிய போக்குவரத்து மேம்பாட்டு கழகம் இவருக்கு 50,000 ரூபாய் சன்மானமும் வழங்கி கௌரவித்துள்ளது.