மும்பை

கிஷோர் லஹானே என்னும் இளைஞர்  தனக்கு இருதய நோய் என மும்பை ரெயில் நிலையங்களில் பிச்சை எடுத்து மாதம் ரூ. 60000 சம்பாதித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படம் ஒன்றில் தனுஷ் தனக்கு பொய்யாக காயங்கள் ஏற்படுத்திக் கொண்டு ரெயில் நிலையத்தில் பிச்சை எடுப்பார்.   அது திரைக்கதை என நினைத்திருந்தோம்.   ஆனால் உண்மையில் மும்பையில் தனுஷின் பாணியை பின்பற்றி கிஷோர் லகானே என்பவர் ரெயில் நிலையத்தில் தன் கைவரிசையை காட்டியுள்ளார்.  முழு விவரம் இதோ.

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான கிஷோர் லஹானே.  இவர் மும்பையில் தனது தந்தையுடன் அம்பர்நாத் பகுதியில் வசித்து வருகிறார்.   இவர் தினமும் மும்பை புறநகர் ரெயிலில் ஒரு அட்டையுடன் வந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.  அந்த அட்டையில் “ரூ.10 எனது இதய அறுவை சிகிச்சைக்கு கொடுத்து என் உயிரைக் காப்பாற்றுங்கள்” என எழுதி எடுத்து வருவார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கிஷோர் தனது அட்டையுடன் தாதர் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.   அவர் தனக்கு இதய நோய் இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள இப்படி பிச்சை எடுப்பதாகவும் கூறி உள்ளார்.   அதற்கான அத்தாட்சியை கேட்டபோது அதை கொடுக்காமல் நழுவ முயன்றுள்ளார்.   ஆனால் போலீசின் கிடுக்கிப் பிடியால் தனது பையில் வைத்திருந்த மெடிகல் சர்டிபிகேட்டை கொடுத்துள்ளார்.

அதில் அவருக்கு இருதய நோய் இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை தேவை எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.   அந்த சர்டிஃபிகேட் அவருக்கு 2011 ஆம் வருடம் வழங்கப் பட்டிருந்தது.   பிறகு மருத்துவமனையை தொலைபேசியில் விசாரித்த போது அது போலி என தெரிய வந்தது.   மேலும்விசாரித்த போது அவர் அதே தினம் காலையில் மும்பை சி எஸ் டி ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்ததற்காக பிடிபட்டு ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அபராதம் செலுத்தி விட்டு உடனடியாக ரெயில்வே நிலையத்தை மாற்றி தாதரில் பிச்சை எடுக்க வந்தது தெரிய வந்துள்ளது.

கிஷோர் கூறிய தகவலின்படி ஒரு மணி நேரம் பிச்சை எடுத்தால் அவருக்கு ரூ.300 வரை கிடைத்து வந்ததாகவும்,  ஒரு மாதத்துக்கு ரூ. 60000 க்கு குறையாமல் அவருக்கு பிச்சை கிடைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.  இது குறித்து ரெயில் பயணிகளுக்கு மும்பை ரெயில்வே போலீசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.