டில்லி

விமானத்தில் உள்ளதைப் போல் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் பயணிகளுக்கு தெரிய வேண்டும் என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போது ரெயிலில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்படும் போது முதலில் பதிபவருக்கு முதல் இருக்கை என்னும் முறையில் பதிவு செய்யப்படுகிறது. அது முடிந்ததும் ஆர் ஏ சி மற்றும் அதற்கு பிறகு வெயிட்டிங் லிஸ்ட் ஆகியவையும் பதிவு செய்யப்படுகின்றன. உறுதி செய்யப்பட்ட டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஒதுக்கப்பட்ட டிக்கட்டுகள் விற்கப்படா விட்டாலோ வரிசைப்படி ஆர் ஏ சி மற்றும் வெயிட் லிஸ்ட் டிக்கட் தாரர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் பதிவு செய்யும் போது எந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை ரெயில் பயணிகள் அறிந்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் விமானப் பயணிகளுக்கு முன்பதிவு செய்யும் போது இருக்கைகளின் படம் வருகிறது. மற்றும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத இருக்கைகள் வெவ்வேறு நிறத்தில் காணப்படுகிறது.

வெயிட் லிஸ்டில் உள்ள பயணிகள் எந்த இருக்கைகள் காலி என்பதை அறிய முடியாததால் டிக்கட் பரிசோதகர்களையே நம்பி உள்ளதாக புகார் அளித்துள்ளதாகவும் ரெயிவே அதிகாரிஒருவர் கூறி உள்ளார். அதனால் தற்போது ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விமானத்தில் உள்ளதைப் போல் ரெயில் பயணிகளுக்கும் இருக்கைகள் காலி விவரம் அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் எனவும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக இருக்கைகள் குறித்த விவரங்கள் அளிப்பது பாதுகாப்பு முறைப்படி சரியல்ல என தெரிவித்துள்ளார். அத்துடன் விமானத்தைப் போல் அல்லாமல் ரெயிலில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளதால் இருக்கைகள் நிலை ஒவ்வொரு நிலையத்திலும் மாறுபடும் எனவும் அவர் கூறி உள்ளார்.