டெல்லி:

டெல்லியை சேர்ந்த விஜய்குமார் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி விசாகப்பட்டிணத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். மூட்டு வலி காரணமாக அவர் கீழ் தள படுக்கை வசதி இருக்கையை ரிசர்வ் செய்திருந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் பினா ரெயில்நிலையத்தில் பலர் கூட்டமாக இந்த ரெயிலில் ஏறினர். அதில் ஒருவர் விஜய்குமாரின் இருக்கையை ஆக்ரமித்து கொண்டார். பெரும்பாலான பயணத்தில் அந்த இருக்கையை அந்த நபர் தான் உட்கார்ந்திருந்தார்.

இது குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே அதிகாரிகளிடம் அவர் புகார் செய்ய முயற்சித்தார். ஆனால் யாரும் இல்லாததால் புகார் அளிக்க இயலவில்லை.

இது குறித்து மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ‘‘இந்தியன் ரெயில்வே விஜயகுமாருக்கு ரூ. 75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டு தொகையில் 3ல் ஒரு பங்கை டிக்கெட் பரிசோதகர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாயம் டிக்கெட் பரிசோதகர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. விஜய்குமாருக்கு ரூ. 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மாவட்ட தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்து நீதிபதி வீனா பீர்பால் உத்தரவிட்டார்.