அதிக எடையால் உடைந்த மும்பை ரெயில்வே பாலம் : ரெயில்வே ஆணையம்

டில்லி

மும்பை ரெயில்வே மேம்பாலத்தில் அதிக எடையை அனுமதித்ததால் உடைந்து விட்டதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மும்பை அந்தேரி பகுதியில் கோகலே சாலையில் ஒரு ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.   அந்தப் பாலம் இந்த மாதம் மூன்றாம் தேதி திடீரென உடைந்து விழுந்தது.   இதனால் ஒருவர் மரணம் அடைந்தார்.    அத்துடன் ரெயில்வே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த விசாரணையை நடத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை அறிக்கையை ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் அளித்துள்ளது.  அந்த அறிக்கையில், “பாலம் ஏற்கனவே துருவால் அரிக்கப்பட்டு பலவீனமாக இருந்துள்ளது.  அத்துடன் அந்த பாலத்தை தாங்கும் இரும்பு கர்டர்களும் மிகவும் பலவீனமாகி விட்டன.   இந்நிலையில் மும்பை மாநகராட்சி இந்த பாலத்தில் மேலும் அதிக எடையை அனுமதித்துள்ளது.

இந்த பாலத்தில் மாநகராட்சியால் பொருத்தப்பட்டுள்ள மின் கேபிள்கள், நடைபாதை சிமிண்ட் கற்கள் உள்ளிட்டவைகளே அந்த அதிக எடை ஆகும்.   இவ்வாறு எடையை அதிகமாக பொருத்திய மாநகராட்சியே  இந்த விபத்துக்கு காரணம்.  மேலும் இவ்வாறு பொருத்த ரெயில்வே நிர்வாகத்திடம் மாநகராட்சி அனுமதியை பெறவில்லை” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை மாநகராட்சி, “நாங்கள் இன்னும் அந்த அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை.   அதிகமாக மின்கேபிள்களை பொருத்தியதால் பாலம் உடைந்தது என நாங்கள் கருதவிலை.   நாங்கள் எங்கள் தரப்பில் இருந்துஆய்வு செய்து விரைவில் ஒரு அறிக்கையை அள்க்க உள்ளோம்” என தெரிவித்துள்ளது.