டெல்லி: விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு சுமார் ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 31வது நாளை எட்டியுள்ளது.  வேளாண் சட்டங்களை திரும்பெ பெறும்வரை போராட்டம் ஓயாது என விவசாயிகள் கடும் குளிரிலும், டெல்லி எலையில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பல மாநிலங்களில் ரயில் மறியலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மோடி அரசு பிடிவாதமாக உள்ளது.
இந்த நிலையில், விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு 2400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வட இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  பொது மேலாளர் அஷுடோஷ் கங்கால், விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகிறது.  “தற்போது அமிர்தசரஸ் மற்றும் பீஸ் இடையேயான ரயில் பாதை மறியல் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்படுடுள்ளது.  இதனால் நீண்டதூர ரயில்கள் இயக்கப்படுவதில் சிரமம்  தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக ரயில்வேக்கு இதுவரை ரூ.2400 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில்வே துறை முடங்கி உள்ள நிலையில், தற்போது விவசாயிகளின் போராட்டம் காரணமாகவும் ரயில்வேக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.