வாழ்நாளில் கிடைக்காத வாய்ப்பு… ஊரடங்கை பராமரிப்புக்கு பயன்படுத்தும் ரயில்வே…

--

புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தை பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே பயன்படுத்தி வருகின்றது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ரயில், விமான போக்குவரத்து உட்பட, நாட்டின், 60 சதவீத பணிகள் முடங்கின. ஆனால், ஓய்வே இல்லாமல், 24 மணி நேரம், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும், இந்திய ரயில்வே, சாமர்த்தியமாக, ஊரடங்கு காலத்தை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. இதன், 500க்கும் மேற்பட்ட பராமரிப்பு இயந்திரங்கள், முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அவை, 12 ஆயிரத்து, 270 கி.மீ., துார ரயில் தண்டவாளங்களை பழுது பார்த்து, சரி செய்துள்ளன.

மேலும், மின்சார ரயில் செல்லும் தடங்களில் பொருத்தியுள்ள மின் கம்பிகள், சிக்னல் சாதனங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணியையும் மேற்கொண்டன. ரயில் தண்டவாளங்களில் உள்ள விரிசலை கண்டுபிடிக்க, யு.எஸ்.எப்.டி., எனப்படும், புற ஊதாக் கதிர் வீச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம், 30 ஆயிரத்து, 182 கி.மீ., துாரத்திற்கு, தண்டவாள விரிசலை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த இயந்திரம் மூலம், 1 லட்சத்து, 34ஆயிரத்து, 443 இடங்களில் தண்டவாள இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான, 5,362 பகுதிகளில், ரயில் தண்டவாளங்களின் உறுதித் தன்மை பரிசோதித்து பார்க்கப்பட்டன. காசிப்பெட், விஜய வாடா, பெங்களூரு, பரோடா ரயில் நிலையங்களில், ரயில் தண்டவாளங்களின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

சென்னையில், யானைகவுனி அருகே, பழுதடைந்த ரயில்வே பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜமுந்திரி – விசாகப்பட்டினம் மார்க்கத்தில், ரயில்வே மேம்பாலம், புசாவல் மண்டலத்தில் ஆறு நடைமேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன.அனைத்து பணிகளும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து மேற்கொள்ளப் பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.