நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கருப்பா நதி பகுதியில் 26 மி.மீ அளவு மழையும், கொடிமுடியாறு பகுதியில் 25 மி.மீ அளவும் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் பகுதியில் 23 மி.மீ அளவும், குண்டாறு பகுதியில் 20 மி.மீ அளவும், அடவிநயினார், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 19 மி.மீ அளவும், சேர்வலாறு பகுதியில் 17 மி.மீ அளவும், ஆயக்குடி, தென்காசி பகுதிகளில் 6 மி.மீ அளவும், கடனா, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் 2 மி.மீ அளவும், மணிமுத்தாறு பகுதியில் 1 மி.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில் தொடர் மழை பெய்து வந்தாலும், குற்றால சீசன் காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தே காணப்படுகிறது.