சென்னை: கிட்டத்தட்ட 6 மாதங்களாக வறட்சியின் பிடியில் தத்தளிக்கும் சென்னை நகரம், தென்மேற்கு பருவக்காற்றின் புண்ணியத்தால் மழையைப் பெறும் என வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இன்னும் ஒருசில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அங்கே மழை பெய்ய‍ வேண்டுமென்றால், மேகங்களை நகரச் செய்யும் வகையில் மேற்கு திசையிலிருந்து காற்றுவீச வேண்டும். அந்த மேகங்கள் சென்னையின் பக்கத்து மாவட்டங்களில் சேர்ந்து பின்னர் சென்னையை நோக்கி நகரும்.

இந்த நகர்வுகள், பொதுவாக ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டங்களில் நிகழும்.

வேலூர் மாவட்டத்தில் ஜுன் 5ம் தேதி 40.1 மி.மீ. மழை பதிவானது. மேலும், கடந்த சில நாட்களாகவே அம்மாவட்டம் வெப்பச் சலனத்தின் விளைவிலான மழையைப் பெற்று வருகிறது. எனவே, அந்த வகையில் சென்னைக்கான வெப்பச் சலன மழை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.