Random image

உள் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம் தொடர்பாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய, மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும். உள் மேற்கு மாவட்டங்களில் மழையின் போது 30 கி.மீ முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

உள் மாவட்டங்களை பொருத்தவரை, ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. அதைப்போலவே, சென்னையை பொருத்த வரையும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரீரு இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.