சென்னை: 

காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த மாதம் 30ந்தேதி தென் மாவட்டங் களை ஓகி புயல் புரட்டி எடுத்தது. அதைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களாக எந்தவித மழையும் பெய்யாத நிலையில், இன்று காலை முதல் சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் சாரலும் வீசியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது,

காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவ மழையைப் பொறுத்தவரை 6% பற்றாக்குறையாக உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.