சென்னையில் காலை 10 மணி முதல் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

சென்னை: தமிழகத்தில் 17ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் இன்று காலை 10 மணி அளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. திடீர் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,தென் தமிழகம் ,வட உள் மாவட்டங்களைப் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை 10 மணிக்குமேல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தூறல் விழுந்தது. சுமார் 10.30 மணி அளவில் வடசென்னையின் பல பகுதிகள்    மாதவரம், கோயம்பேடு,   கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை நாளை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

15ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், 16 ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

17-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.