சென்னை:
சென்னையின் பல இடங்களில் இன்று மாலை 4 முதலே ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில்  சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், சமீப நாட்களாக  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சேலம், கோவை, நீலகிரி உள்பட 17  மாவட்டங்களில்  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் இன்றும்  தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங் களிலும் கனமழை பெய்யலாம், சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு வந்தது. மாலை 4 மணி அளவில், மேடவாக்கம், செம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், பெருங்களத்தூர் உள்பட தென்சென்னை பகுதியில் தொடங்கிய மழை தொடர்ந்து மத்திய சென்னை, வடசென்னை உள்பட சென்னையுல் புறநகர் பகுதிகளிலும்   பரவலாக மழை பெய்து வருகிறது.
வடமேற்கு திசையில் இருந்து வீசும் கடல்காற்று காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.