சென்னை:

மிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக மழை குறைந்திருக்கிறது. இருந்தபோதிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை தாண்டிவிட்டது. பரவலாக தமிழகத்தில் மழை பெய்யாவிட்டாலும், தென் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு (இன்று முதல்) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் இன்று (புதன்கிழமை) காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.