அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தில் மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை
தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்யக்கூட்டும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிரது. இந்த மழை கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 தினங்களாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2ஆம் தேதி பலத்த மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அதிகரித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம், “தெற்கு கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரை வளிமண்டலத்தின் கீழடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. வளி மண்டலத்தின் மேலடுக்கில் தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.
இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சேலம், காஞ்சி உள்ளிட்ட இடங்க்ளில் கனமழை பெய்யலாம். சென்னை நகரில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.