தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற இடங்களில் 4 நாட்களுக்கு மழை

சென்னை

மிழகத்தில் சென்னையை தவிர மற்ற இடங்களில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் மழைக்காக ஏங்கி வருகின்றனர். சமீபத்தில் வீசிய ஃபனி புயலால் நல்ல மழை பெய்யும் என ஊகங்கள் வெளியாகின. ஆனால் அந்த புயல் ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் பக்கம் சென்று விட்டது. இந்த கோடையில் திருத்தணியில் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி அன்று அதிகபட்ச வெப்பமாக 43.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

இதை அடுத்து கரூர் பரமத்தியில் 42 டிகிரி, திருச்சியில் 41 டிகிர், சென்னை விமான நிலையத்தில் 41.2 டிகிரி, வேலூரில் 41.1 டிகிரி என அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளன. இதைப் போல நேற்று மதுரை, பாளையங்கோட்டை, மற்றும் சேலம் பகுதிகளிலும் 40.5- 40.8 டிகிரி வரை வெப்பம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று இந்த கோடையின் வானிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மழை சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநக்ர், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்த அல்லது மிதமானதாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 40 முதல் 50 கிமீ வேகத்திலும் மின்னலுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு.

இந்த மழை சென்னயில் பெய்யாது.  சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் மற்றும் சுற்றுப்புறங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரியிலும் குறைந்த பட்சமாக 29 டிகிரியிலும் இருக்கும்.