கேரளாவில் மழை ஒய்ந்தது….இயல்பு நிலை திரும்புவதால் மக்கள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம்:

கேரளாவில் பஸ், ரெயில் போக்குவரத்து படிப்படியாக தொடங்கியுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலானா அணைகள் நிரம்பின. அனைத்து அணைகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. 40 சதவீத மக்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

பலத்த மழையால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடாக அங்குள்ள கடற்படை விமான தளத்தில் பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தில் முதல் பயணிகள் விமானம் இன்று காலை தரையிறங்கியது. நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் கொச்சி கடற்படை விமானதளத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.