வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் கூறியதாவது,

வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு கடற்கரை  ஒட்டிய பகுதியில் தொடர்ந்து நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும்,  அந்தமான் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களை விட 3 மீட்டர் வரை அலைகள் அதிக அளவில் இருக்கும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே  கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடல் சீற்ற எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தென்தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பசலனம் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான கடற் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டில் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து வேறு  இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.