வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்றிரவு முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.


கடந்த 17ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தொடக்கத்தில் பலமாக பெய்தது. ஆனால், அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறைய தொடங்கியது.
திடீரென வெப்பசலனம் காரணமாக 2 நாட்களாக, சென்னை உள்பட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந் நிலையில், இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதனால் இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.