வரும் 12ம் தேதி வரை தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வரும் 12ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: வளி மண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 12ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த 2 நாட்களுக்கு நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.