தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

மிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

“தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும்  வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை சாத்தூர் அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பரூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், வேலூர் வாணியம்பாடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வேலூர் நகர் பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலை பொருத்தவரையில், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக தலா 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். ஆகவே  மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.