புதுடெல்லி: கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை திடீரென 4ம் நிலையில் களமிறக்கிவிட்ட அன்றைய கேப்டன் தோனியின் வியூகம் குறித்து விளக்கியுள்ளார் ரெய்னா.
பாகிஸ்தானுக்கு எதிரான ‍அந்த லீக் போட்டியில், இந்தியா முதலில் களமிறங்கி ஆடிக் கொண்டிருந்தது. கோலியும் தவானும் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது பெவிலியனில் அமர்ந்து சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்த கேப்டன் தோனி, என்னை ‘பேட்’ கட்டி தயாராக இருக்கும்படி கூறினார். ஆனால், அப்போது அவரிடம் நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவரின் முடிவு எனக்குப் புதிராக இருந்தது. ஏனெனில், பொதுவாக நான் 5ம் நிலையில்தான் களமிறங்கி வந்தேன். அப்போது, ஆட்டம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனால், அடுத்த சில ஓவர்களில் ஷிகர் தவான் அவுட்டானார். அப்போட்டியில், நான் கோலியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 110 ரன்கள் நின்று, 56 பந்துகளில் 74 ரன்களை எடுத்தேன்.
ஆட்டத்திற்கு பின்னர் இதுகுறித்து தோனியிடம் கேட்டபோது, அப்போது பந்துவீசி வந்த பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷாவிற்கு எதிராக அப்போது நீ களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். எனவேதான் அந்த முடிவு என்றார் தோனி” என தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரெய்னா.
அப்போட்டியில், கோலி 107 ரன்களை விளாச, இந்தியா மொத்தமாக 300 ரன்களைக் குவித்து, பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதேபோன்றுதான், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதியில், மூன்றாவது விக்கெட்டாக கோலி ஆட்டமிழந்ததும், யாரும் எதிர்பாராத வகையில், யுவ்ராஜை தவிர்த்துவிட்டு, 5வது வீரராக தான் களமிறங்கினார் தோனி. அந்த ஆட்டத்தின் முடிவு என்னவானது என்பது நமக்கெல்லாம் தெரியும்!
பழைய பாடங்கள் இப்படியிருக்க, 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில், இந்த வியூகத்தை கோலியும், ரவி சாஸ்திரியும் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை.