தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

--

சென்னை:

மிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த வாரம் ஒரிரு நாட்கள் சென்னையிலும் மழை பெய்தது. தற்போது மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், வெப்பச்சலனம் உருவாவதன் காரணமாக மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மைய அதிகாரி கூறி உள்ளார்.

வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் உருவாகி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை மூலம் கிடைக்கும் சராசரி மழையின் அளவு இந்த ஆண்டும் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

You may have missed