தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு…

சென்னை:

மிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி காரணமாக ஆந்திர கடற்கரைப் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.