மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மழை: பெரியாறு அணை 132 அடியை எட்டியது

தேனி:

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், முல்லை பெரியாறு அணை மீண்டும் 132 அடியை எட்டி உள்ளது. கடந்த சில  நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம், கேரளாவில் தொடர்ந்து மழை காரணமாக விறுவிறுவென உயர்ந்து தற்போது 132 அடியை எட்டி உள்ளது.

அணைக்கு வினாடிக்கு  3474 கனஅடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேலும் தேனி, பெரியகுளம் சுற்றி உள்ள மலை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், வைகை அணையிலும் தண்ணீர் பெருகி வருகிறது. விரைவில் அணையின் நீர் மட்டம் 60அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல,  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தற்போது  46.50 அடியாக உள்ளது. அதற்கு வினாடி 37 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

மற்றொரு அணையான சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு  26 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3 கன அடி நீர் விவசாயத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கேரளாவில் பெய்த பேய்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அப்போது  தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என கேரள அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. அணை பலவீனமாக இருப்ப தாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது பெரியார் அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது.