சென்னை:

சென்னையில் வரும் 11-ந்தேதி முதல்  மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் ஆண்டு தோறும் தென்மேற்குப் பருவ மழை  ஜூன் மாதமே தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு வாயு புயல் காரணமாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடையாமல் போனது. இதையடுத்து அவ்வப்போது சில இடங்களில் மட்டும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில், வரும் 11-ந்தேதி முதல் சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தென் மேற்கு பருவ மழை காலங்களில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் . என்றும்,  ஒடிசா அருகே வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி செல்வதால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்துக்கு இதனால் மழை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து உள்ளது.

மேலும், காற்றின் திசை மாற்றம் வெப்பச்சலனம் காரணமாக 11-ந்தேதி முதல் சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது . அதன் காரணமாக 15-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.