சென்னை:

மிழகத்தில் தற்போது வீசி வரும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் பருவமழை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், வரும்  11-ந்தேதி முதல் சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் வெப்பம் குறைந்து காற்று வீசி வருகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  நீலகிரி, தேனி, திண்டுக்கல்,  கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டரும், தேனி மாவட்டம் பெரியாறில்  4 சென்டிமீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறையில் 2 சென்டிமீட்டரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 சென்டிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.