சென்னை:

மிழகத்தில் உள்ள அனைத்து வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என  அனைத்து வகையான கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்  நிலத்தடி நீர் மட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதன் காரணமாக மழைநீர் சேகரிப்பை தமிழகஅரசு ஊக்குவித்து வருகிறது.

இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் ஆகும். எனவே, இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதிலும் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்று கூறினார்.

மேலும்,  3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவாவிட்டால், நோட்டீஸ் அனுப்பப்பட்டு கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர்,  கட்டிடங்கள் தவிர சாலை யோரங்களிலும் மழைநீரை சேகரிக்கும் அமைப்பை செயல்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாகவும்,  அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.